நான் சிறுவனாக இருந்தபோது எங்க ஊரில் கடற்கரைக்கு போகிற வழியில் ஒரு ஆலமரம் இருந்தது,அங்குதான் நான் என் நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் விளையாடுவது வழக்கம். அந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பெரிய ஒட்டு வீடு இருக்கும்,அங்குதான்  நான் முதன்முதலா பிரபா அண்ணனைப் பார்த்தேன்,அங்கே நிறைய பேர் தங்கியிருந்தாலும் பிரபா அண்ணன் எங்களோட நல்ல பழகுவார்.அந்த வீட்டில் நிறைய பத்திரிக்கைகளும் புத்தகங்களும் கிடைக்கும். அங்கே இருந்த மற்றவர்களுக்கு நாங்க அவங்க வீட்டுக்கு போறது அவ்வளவாக பிடிக்காது என்றாலும் எங்களிடம் பெரிதாக கோபித்துக்கொண்டது கிடையாது.அதற்கும் காரணம் இருந்தது. ஒருமுறை நாங்கள் பீரோவிற்கு பின்னால் இருந்த ஒரு பெரிய துப்பாக்கியை பார்த்து அது ஏன் உங்களுக்கு என்ற துடுக்குத்தனமான கேள்வியால் கூட இருக்கலாம்.
அவர்கள் பேசுகிற தமிழ் சில சமயங்களில் புரிவதில்லை,ஏன் இப்படி வேறு விதமாக தமிழ் பேசுறீங்க என்று நாங்கள் கேட்கும்போது அதுதான் சுத்தமான தமிழ் என்று பலமுறை சொல்ல கேட்டிருக்கிறேன்.அவர்களுக்கு சொந்தமான இரண்டு பிளாஸ்டிக் போட் இருந்தது,திடீர் திடீரென அவர்கள அதில் கிளம்பி போவதும் வருவதும் எங்களுக்கு ஏன் என்று தெரியாமலே இருந்தது. அந்த போட்டில் ஒரு தடவையாவது ரவுண்ட் போயிட்டுவரனும் என்பது எங்களோட பெரிய ஆசையாகவே இருந்தது.பிரபா அண்ணன் எங்களை அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்.
நண்பன் குமாரின் அப்பாவை நேவிக்காரன் சுட்ட பிறகுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே எதிரி என்பதே தெரிய வந்தது.வசந்தன் அண்ணனுக்கு காலில் குண்டடி பட்டிருப்பதாகவும் பிரபா அண்ணன் அவர்களது ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும்,வந்தவுடன் போட்டில் கூட்டிக்கொண்டு போவதாகவும் சொல்லி கிளம்பி சென்றார்.
மூன்று நாட்களாகியும் அவர் திரும்பி வராததால் நாங்கள் செல்வா அண்ணனை விசாரித்தோம் .பிரபா அண்ணன் குண்டடி பட்டு இறந்து விட்டதாக சொன்னார்.எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை .அந்த நேரம் அங்கு வந்த கதிரவன் அண்ணன் "என்னடா சின்ன பசங்களிடன் என்ன கரையிறது என்றே உனக்கு தெரியாதா?" என்று செல்வா அண்ணனிடம் கோபித்துக்கொண்டார்.பிறகு எங்களை தனியே அழைத்துசென்று "பிரபாவுக்கு உடம்பு முடியலை ,விரைவில் வந்துவிடுவான்"என்று கூறினார் .ஏனோ அவர் சொல்வது எனக்கு உண்மையாகவே பட்டது என்பதைவிட சந்தோசம் அளித்தது  என்றே சொல்லவேண்டும் . எவ்வளவோ ஆண்டுகள் ஓடி விட்டது , எத்தனையோ செய்திகளும் கேட்க முடிகிறது . அது உண்மையென்றும் இல்லை அது பொய்யென்றும் பல ஆதாரங்கள் மாற்றி மாற்றி சொல்லப்படுகிறது .இருந்தாலும் அந்த கேள்வி மட்டும் அப்படியேதான் இருக்கிறது.

பிரபா அண்ணன் எப்போ வருவார்...?

7 Responses to "பிரபா அண்ணன் எப்போ வருவார்?"

 1. gravatar சந்தனமுல்லை Says:

  உங்களுக்கு உங்கள் நண்பர்களுக்கு சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை! :((

 2. gravatar வண்டிக்காரன் Says:

  ஏதோ எழுதனும் என்று தோன்றியது ,சரியாய் Present பண்ணியிருக்கேனா என்று கூட தெரியவில்லை.
  வருகைக்கு நன்றி சந்தனமுல்லை

 3. gravatar M.S.E.R.K. Says:

  இதேப்பொலத்தான் உலகெங்கும் பலர் இதுப்போன்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் தவிக்கின்றனர்.

 4. gravatar ரோஸ்விக் Says:

  நல்லாத் தான் எழுதீருக்கீங்க...நானும் அண்ணனுக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன்.

  அண்ணேன் பேரு தலைப்புல இருக்காதால நிறைய பேரு வந்து படிச்சிருப்பாங்க. கலக்குங்க.

  http://thisaikaati.blogspot.com

 5. gravatar வண்டிக்காரன் Says:

  வருகைக்கு நன்றி ரோஸ்விக்

 6. gravatar வண்டிக்காரன் Says:

  வருகைக்கு நன்றி M.S.E.R.K.

 7. gravatar Annamalai Says:

  என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது குழப்பமாக இருக்கு