அன்று வீட்டுக்குள் நுழைந்தவுடனே
சமையற்கட்டிலிருந்து குரல்
"உங்களை கல்யாணம் கட்டியதிலிருந்து
என்ன சொகத்தை கண்டேன்
ஒரு பட்டு புடவை வாங்குவதற்கு
தீபாவளி பொங்கல்னு காத்து கிடக்க வேண்டியிருக்கு
ஒரு LCD TV வாங்கி வைங்கலேன்னு கேட்டா
அழுகிற சீரியல் பார்கிறதுக்கு
அம்புட்டு காசு எதுக்குன்னு நையாண்டி வேற
தியேட்டருல போயி ஒரு படம் பார்கிறதுக்கு
கம்யூட்டரை தட்டி கணக்கு பார்க்கிறீங்க
ஸ்கூல் பசங்களெல்லாம் iPhone, rPhone-ன்னு சுத்தும்போது
வீட்டிலேதானே இருக்க உனக்கு எதுக்கு செல்போனுன்னு
ஒரு காரணம் சொல்றீங்க
கல்யாணம் பார்டின்னு போட்டுக்கிட்டு போகிறதுக்கு
ஒரு நல்ல நகை கிடையாது
ஒரு ராணி மாதிரி வச்சிருந்த அப்பா அம்மாவை விட்டுட்டு
உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணின பாவத்துக்கு
நீ செய்த நல்லதுதான் என்ன?"
இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தாலும்
அந்த வார்த்தை வந்தே விட்டது
"போடி போ உங்க அப்பன் வீட்டுக்கே போயிடு "
"ஏன் சொல்ல மாட்டீங்க முப்பது வருசத்துக்கப்புறம்
இவ எங்க நம்மை விட்டு போகப்போறானு தைரியம் "
என்று சொல்லிக்கொண்டு கையில் கரண்டியோடு
வந்த மாமியார் என்னை பார்த்துவிட்டு
"ஹி ஹி வாங்க மாப்பிள்ளை "


பி.கு : இதை உரையாடல் கவிதை போட்டியில் சேர்க்கலாம்னு யாராவது சொல்லுங்கப்பா ..

நம்ம சுந்தர் எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தான்.உங்களுக்கு ஏற்கனவே அனுப்பி இருந்தான்னா நீங்க இதை படிக்க வேண்டாம்,விடுங்க ஜூட். மெயில் நான் எழுதவில்ல அதனால் நன்றாக இருக்க வாய்ப்பு இருக்கு . அதில் ..
மச்சான்,
ஆபீஸ்ல நேத்துதாண்டா ரொம்ப மோசமான நாள்.உனக்கே தெரியும் என்னோட ஆபீஸ் கடலுக்கு அடியில் இருக்குனு.ஆபீசுக்கு எப்பவுமே சூட் போட்டுக்கிட்டுத்தான் போகணும் அதுவும் ஈரமா இருக்கும்.எங்களை டைவரு , டைவருனு (diver) சொல்லுவாங்க ,உள்ளே போயி எதாவது கிடைக்குதா ஆராய்ச்சி பண்ற வேலை.
தண்ணி ரொம்ப குளிரா இருக்கிறதால , தண்ணியை கதகதப்பா ஆக்குவதற்காக ஒரு பெரிய வாட்டர் ஹீட்டர் எங்க ஆபீஸ்ல இருக்கும்.அது கடலில் இருக்கிற தண்ணியை உறிஞ்சு எடுத்து ,அதை சூடாக்கி சின்ன சின்ன குழாய் கள் மூலம் எங்க மெல் ஊற்றும்.எப்பவுமே வேலை நேரத்தில் நான் அந்த குழாய் தண்ணியை என் மெல் ஊத்திகிட்டு கதகதப்பா நம்ம தொழிலை செய்வேன்.
அன்னைக்கும் அதையேதான் செய்தேன்.கொஞ்ச நேரத்தில் என்னோட பின்புறம் அரிக்கிற மாதிரி இருக்க நானும் நல்லாவே சொரிஞ்சு வுட்டுட்டேன்,அதுதான் நான் செய்த பெரிய தப்புன்னு நெனைக்கிறேன்.பின்புறம் பயங்கரமா எரிய ஆரம்பிச்சிடுச்சு .உடனே நான் குழாயை தூக்கி வீசிட்டேன் ,ஆனால் அதுக்குள்ளேயே என்னென்ன நடக்கூடதோ எல்லாமே நடந்திடுச்சு. அந்த மெசின் தண்ணியோட சேர்த்து ஒரு ஜெல்லி மீனையும் என்னோட டிரெஸ்ல வுட்டுருச்சுனு அப்புறம்தான் தெரிஞ்சது .


நம்ம பின்புறத்தில் முடி ஏதும் இல்லாம இருந்ததால ஜெல்லி ஒன்னும் பண்ணமுடியல.ஆனா நம்ம  பின்புறம் அதிர்ஷ்டம் கெட்டதுன்னு நெனைக்கிறேன்.நான் சொரிஞ்சு விட்டது அரிப்பு வந்ததால் தான் என்றாலும் ,நான் சொரிஞ்சதுல ஜெல்லி உள்ளே போயிருச்சு.அதை பிச்சு எடுக்குறதுக்குள்ள பட்ட பாடு  ..ஸப்பா..ஸப்பா..ஸப்பா..ஸப்பா..ஸப்பா .
டேமேஜருக்கு இன்பார்ம் பண்ணிட்டு கிளம்பலாம் அப்படின்னு அவன எங்க தொடர்பு சாதனம் வழியாக புடுச்சு பேசுறேன்,பக்கத்தில இருந்த மத்த பய புள்ளையெல்லாம் கெக்கே பிக்கேன்னு சிரிக்குதுக. அதுகள ஒரு டெர்ரர் பார்வை பார்த்திட்டு அப்பிடியே மெதுவா நீஞ்சு  தரைக்கு வந்து சேர்வதற்கு அரை  மணி நேரம் ஆகிடுச்சு. மேல  வந்தா பிறகு  எங்க கொம்பெனி டாக்டரு ஒரு டுயுப் மருந்த கொடுத்து பின்னாலே பூசிக்கோடா அப்படின்னு ஒரு நக்கலான  பார்வையோட கொடுத்தான்.அதை போட்ட பிறகுதான் பின்புறத்துல எரிச்சலே போச்சு ஆனால் ரெண்டு நாளைக்கு கொல்ல பக்கமே போகமுடியல...ம்ம் மருந்துன்னு என்னத்தையோ கொடுத்து பின்புறத்தையே  அடச்சு போட்டுடண்டா அந்த பாவிப்பய..
அதுக்கு பிறகுதான் ஹீட்டர் மெசின்ல கடல் வழ உயிரினம் எதாவது வந்தா தடுக்க பில்ட்டர் சிஸ்டமே வச்சாய்ங்க.
அன்புடன்
சுந்தர்


இன்னைக்கு ரொம்ப மோசமான நாள்ரா ஆபீஸ்ல அப்படின்னு அடிக்கடி ரொம்ப புலம்புற பார்ட்டியா நீங்க , நம்ம சுந்தர் நிலைமையை கொஞ்சம் யோசுச்சு பாருங்க.



வடபழனி குமரன் காலனியில் எனது பக்கத்து அறையில் தங்கியிருந்தார் ராஜன். உதவி இயக்குனராக ஒருவரிடம் வேலை பார்த்து வந்தார். எனது ரூம் மேட் சுந்தர் ஒரு உதவி கேமரா மேனாக இருந்ததால் அவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. டீக்கடைக்கு போகும்போது,மேஸ்ல சாப்பிடும்போது,பீர் அடிக்கும்போது ,ஏன் படம் பார்க்கும்போது கூட ஏதாவது கதை சொல்லி எப்படியிருக்கு ,இந்த கதை இந்த ஹீரோவுக்கு சரியாய் இருக்குமா , ஏற்கனவே எந்த படத்திலாவது இந்த கதை வந்திருக்கா அப்படின்னு கேட்டு கொண்டேயிருப்பார்.
நான் மூன்று நாள் மொத்தமாக லீவு கிடைத்தாலே பெட்டியை தூக்கிக்கொண்டு ஊருக்கு கிளம்பும் போது மனுஷன் ஆறு வருஷமா ஊருக்கு போனதே இல்லையென சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.பல நேரங்களில் டைரக்டர் ரொம்ப அசிங்கமா திட்டிட்டாருங்க என்று புலம்பும்போது ,ப்ராஜெக்ட் மேனேஜர் ஏன் வேலை முடியலைன்னு கேட்டாலே , என்னைய சிங்கபூர்ல கூப்புடுறாங்க.அமெரிக்காவுல கூப்புடுராங்கன்ன்னு சொல்லி பேப்பர் போட்டுட்டு வந்துகிட்டிருக்கோம்,நீங்க ஏன் இப்படி இருக்கீங்க வேற வேலை பார்க்கலாமே என்று கொபப்பட்டதுண்டு. நானே அவரிடம் கேட்டிருக்கிறேன்,

 "அப்படி என்னதாங்க இருக்கு இந்த சினிமாவுல ,நிறைய பணம் சம்பாரிக்கனுமா, நல்ல படம் எடுத்து மக்களுக்கு செய்தி சொல்லனுமா , நல்ல பேர் எடுக்கனுமா,இல்லை அந்த புகழ் போதைக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்களா?" அப்படின்னு.
ஆனால் அவரது பதில் எப்பவுமே ஒன்றாகத்தான் இருந்தது "ஒரு டைரக்டர் ஆகணுங்க ".
ஒரு நாள் திடிரென்று சொன்னார்
"டைரக்டர்கிட்ட நான் தனியாக படம் பண்ணப் போறதாக சொல்லிட்டு வந்துட்டேன் ".
அப்போது அங்கே இருந்த எல்லாருமே ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க,
"ஏன் ராஜன் அவசரப்படுற ? இது என்னோட ரூம் மேட் சுந்தர்.
"நானெல்லாம் பத்து வருஷமா பீல்டில் இருக்கேன் ,என்னையே ஒருத்தனும் மதிக்கிறதில்ல உனக்கு என்னடா இவ்வளோ அவசரம் ?" இது குமார்.
"எத்தனையோ  பேர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நீங்க படம் எடுத்தா நம்மளையும் கண்டுக்கோங்க அப்படின்னு சொன்னானுங்க ,ஆனா இப்ப நம்ம போயி அவனுக முன்னால நின்னா எங்கையோ பார்த்தமாதிரி இருக்கீங்க ,நம்ம அப்புறம் மீட் பண்ணுவோம்கிறான்" இது மாசிலாமணி அண்ணன்.
"அசோசியட்டாவே நாலு படம் பண்ணிட்டேன் ,என்கிட்டேயே உட்கார்ந்து கதை கேக்க மாட்டேங்கிறாங்க .உன்னை யாரு தட்டு வச்சு அழைக்கிறாங்க " இது நம்ம பாண்டி அண்ணன்.
 "உங்க பக்கத்துக்கு ரூமில் இருந்தவரு சின்னப்பையன்,ரெண்டு படம்கூட முழுசா பண்ணல ,இவனையெல்லாம் கம்பனி கேட்லயே நிறுத்திடுவாங்க அப்படின்னு சொன்னிங்க,இன்னைக்கு அஜித் ,விஜயகாந்துன்னு ஆரம்பிச்சு தெலுங்கு வரைக்கும் போயிட்டாரு.இன்னொருத்தரால் இதை பண்ணமுடியும்ன்னா என்னாலும் பண்ண முடியும்". என்று ராஜன் கொஞ்சம் கோபமாகவே பதில் சொன்னார்.
 எனக்கும் அவர்மேல் ஒரு நம்பிக்கை இருந்தது.
 ஹீரோக்களுக்கும்,ஹீரோ அப்பாக்களுக்கும் கதை சொல்றது,கம்பனிகளில் காத்து கிடக்கிறது அப்படின்னு ராஜன் அலைய ஆரம்பிச்சு அந்தா இந்தானு ஒரு வருஷம் ஓடிபோயிருச்சு.வாரத்தில்ரெண்டு நாள் அவரை பார்ப்பதே கஷ்டமாகிவிட்டது.
 ஒரு நாள் என்னிடம் "அடிக்கடி வயிற்று வலி வருது ,டாக்டரை பார்த்துட்டு வரலாம் வர்ரீங்களா " என்று சொன்னார். நானும் சென்றேன் .
 டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு அல்சராக இருக்க வாய்ப்பு இருக்கு பிளட் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு போங்க ,ரெண்டு நாள் கழிச்சு வாங்கன்னு சொன்னார்.
 ரெண்டு நாளில் அல்சர் தான் என்று உறுதியாகிவிட்டது .உதவி இயக்குனர்களுக்கு வரக்கூடாத வியாதி.அதுவும் யாரிடமும் உதவியை எதிர்பார்க்காத,உதவியை மறுக்கிற உதவி இயக்குனர்களுக்கு வரக்கூடாத வியாதி . கொஞ்ச நாளைக்கு தனியாக படம் பண்றத தள்ளி வச்சுட்டு ஒரு நல்ல டைரக்டர்கிட்டவொர்க் பண்ணலாமே அப்படின்னு நானும் அவரை வற்புறுத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
 எனது வேலை பெங்களூருக்கு மாற்றல் ஆகி விடவும் ,சுந்தர் தெலுங்கு படங்களில் வொர்க் பண்ண ஆரம்பிக்கவும் ராஜனை பற்றி அவ்வளவாக அறிய முடியவில்லை .ஆனால் அவர் தனியாக படம் செய்வதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.சுந்தர் ,சென்னை வந்த பிறகு ராஜனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது .
 "ஒரு கம்பனியில் பேசிக்கிட்டு இருக்கேன் ரெண்டு மாசத்திலே பூஜை போட்டுருவோம் , மறந்திராம வந்திருங்க "
 "படத்துக்கு பேரு என்ன ராஜன்?"
 "முடிவாகல .பேப்பரில் பெருசா வரும் பார்த்துக்கோங்க ".
 "ஹீரோயின் யாருங்க " நமக்கு முக்கியமான கேள்வி .
 "ஹீரோ முடிவு பண்ணுவார் .ஹ ஹா " அவரது சின்ன சிரிப்பிலும் ,பெரிய சந்தோஷத்தை உணர முடிந்ததது .
 சுந்தர் கொஞ்ச நாட்கள் கழித்து போன் பண்ணியிருந்தான்.ராஜனை ICU வில் வைத்திருப்பதாக.நான் கிளம்பி வந்து கொண்டிருந்த போதே ராஜன் இறந்துவிட்டதாக சுந்தர் போன் செய்தான்.என் வாழ்க்கையில் கசந்த ரெயில் பயணம் அதுவாகத்தான் இருக்கும்.நான் ஹாஸ்பிடலை அடைந்தபோது

 ராஜனை ஒரு கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். சுற்றி ஒரு சிறிய கூட்டம் இருந்தது.அவரது அம்மாவும் அப்பாவும் அவர் மெல் விழுந்து கதறி கொண்டிருதார்கள்.இப்போதுதான் அவர்களை முதன் முறையாக பார்க்கிறேன்.
 டாக்டரிடம் விசாரித்த போது ஏதோ நோயின் பெயரை சொன்னார்.அல்சர் வந்ததற்கு அப்புறமாவது அவர் உடம்பை ஒழுங்காக கவனித்து இருந்தால் அவரை காப்பற்றி இருக்கலாம் . ஆனல் ராஜன் உடம்பை கவனித்து கொள்ளவே இல்லை என்றார்.அவரை ஊருக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு ,அவரது பொருட்களையும் வீட்டிற்கு கொடுத்துவிடலாம் என்று நானும் சுந்தரும் அவரது அறைக்கு சென்றிருதோம்.அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவரது படுக்கை தவிர அவருடைய அந்த பெட்டி மட்டுமே இருத்தது.பெட்டிமுழுவதும் பைல் செய்யப்பட்ட காகிதங்கள்.ஒவ்வொரு பைலிலும் டைட்டிலுடன் கீழே கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் ராஜன் என்று எழுதியிருந்தது மனதை என்னவோ செய்தது.அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்த பொழுது,ராஜனை ஊருக்கு எடுத்து செல்வதற்கான எல்லா பார்மாலிடிசும் முடிந்திருந்தது.அவரது அப்பாவிடம் கையெழுத்து வாங்குவற்காக ஒரு அட்டெண்டர் வந்திருந்தார்,
 "அய்யா ஒரு கையெழுத்து போட்டுட்டு நீங்க உங்க பையனை எடுத்துகிட்டு போகலாம்".
 அழுது கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து அவரிடம் கேட்டார்  "ரொம்ப நல்லது தம்பி, மை டப்பா இருக்குமா?".


நண்பர் ஒருவர் buy.com -ல் லேப்டாப் 41 டாலருக்கு டீல் போட்டிருப்பதாக சொல்ல நானும் ஏதோ Netbook -காக இருக்கும் என்று பார்த்தால் Listed price $1299 போட்டிருந்தது ,அதுவும் Highend configuration(Intel duo 2.26GHz,Vista Business ,Blutooth,gigabyte Ethernet,4gb RAM,250gb Hd).ஏதோ தப்பாக போட்டிருப்பார்கள் என்று நினத்தாலும், வந்தால் வரட்டும் shipping சேர்த்து 48 டாலர்தானே என்று ஒன்னு ஆர்டர் செஞ்சிட்டேன்.நான் பெற்ற இன்பமோ துன்பமோ நண்பர்களும் அனுபவிக்கட்டுமே என்று எல்லாருக்கும் Phone பண்ணி சொல்லியாச்சு.அண்ணனுக்கு ஒன்று ,தம்பிக்கு ஒன்று எல்லாரும் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.கூட இருதவர்கலெல்லாம் எனக்கு ரெண்டு ,எனக்கு மூணு என்று சொல்ல நண்பர் ஒருவர் மொத்தமா 8 ஆர்டர் பண்ணிட்டாரு.இன்னொரு நண்பர் தப்புன்னு அவங்க கண்டுபிடிக்கறதுக்கு முன்னால் நம்ம வாங்கிடலாம் என்று கூட பத்து டாலர் போட்டு express delivary ஆர்டர் பண்ணிட்டாரு.


எல்லோருடைய சந்தோஷமும் அடுத்த நாள் வரத்தான் நீடிச்சது.அடுத்த நாள் ஆர்டர் confirmation-ல் Wii கேம் (அதுவும் மட்டமான கேம் 21 டாலர்தான் ) என்று வரவும் மக்கள் ஆளாளுக்கு அந்த கம்பெனிக்கு phone செய்து ஆர்டரை நிறுத்தி விடலாம் என்று முயற்சித்தால்,phone ரிங்கிக்கிட்டேதான் இருக்கு எவனும் எடுத்த மாதிரி தெரியல.சரின்னு ஒரு mail-ஐ தட்டிவிட்டுட்டு ,41 எள்ளுதான் என்ற முடிவுக்கு வந்தாச்சு.

அடுத்த நாள்,அங்கேயிருது ஒரு mail வந்தது

"சாரிப்பா தப்பாகி போச்சு ,கஷ்டப்படுத்துனதுக்கு மன்னிச்சுக்கோ ,ஆர்டரை cancel பண்ணியாச்சு காசையும் திருப்பி கொடுததிடுறோம் , 10 டாலர் இனமா(gift voucher) வேணா வச்சுக்க"

எப்படியோ Buy.com இந்த லேப்டோப் மேட்டருக்கு  ஒரு முற்று புள்ளி வச்சிடுச்சு. இதனால் சொல்லப்படுவது என்னவென்றால் "அத்தனைக்கும் ஆசைப்படு".

நான் சிறுவனாக இருந்தபோது எங்க ஊரில் கடற்கரைக்கு போகிற வழியில் ஒரு ஆலமரம் இருந்தது,அங்குதான் நான் என் நண்பர்களுடன் விடுமுறை நாட்களில் விளையாடுவது வழக்கம். அந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பெரிய ஒட்டு வீடு இருக்கும்,அங்குதான்  நான் முதன்முதலா பிரபா அண்ணனைப் பார்த்தேன்,அங்கே நிறைய பேர் தங்கியிருந்தாலும் பிரபா அண்ணன் எங்களோட நல்ல பழகுவார்.அந்த வீட்டில் நிறைய பத்திரிக்கைகளும் புத்தகங்களும் கிடைக்கும். அங்கே இருந்த மற்றவர்களுக்கு நாங்க அவங்க வீட்டுக்கு போறது அவ்வளவாக பிடிக்காது என்றாலும் எங்களிடம் பெரிதாக கோபித்துக்கொண்டது கிடையாது.அதற்கும் காரணம் இருந்தது. ஒருமுறை நாங்கள் பீரோவிற்கு பின்னால் இருந்த ஒரு பெரிய துப்பாக்கியை பார்த்து அது ஏன் உங்களுக்கு என்ற துடுக்குத்தனமான கேள்வியால் கூட இருக்கலாம்.
அவர்கள் பேசுகிற தமிழ் சில சமயங்களில் புரிவதில்லை,ஏன் இப்படி வேறு விதமாக தமிழ் பேசுறீங்க என்று நாங்கள் கேட்கும்போது அதுதான் சுத்தமான தமிழ் என்று பலமுறை சொல்ல கேட்டிருக்கிறேன்.அவர்களுக்கு சொந்தமான இரண்டு பிளாஸ்டிக் போட் இருந்தது,திடீர் திடீரென அவர்கள அதில் கிளம்பி போவதும் வருவதும் எங்களுக்கு ஏன் என்று தெரியாமலே இருந்தது. அந்த போட்டில் ஒரு தடவையாவது ரவுண்ட் போயிட்டுவரனும் என்பது எங்களோட பெரிய ஆசையாகவே இருந்தது.பிரபா அண்ணன் எங்களை அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்.
நண்பன் குமாரின் அப்பாவை நேவிக்காரன் சுட்ட பிறகுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரே எதிரி என்பதே தெரிய வந்தது.வசந்தன் அண்ணனுக்கு காலில் குண்டடி பட்டிருப்பதாகவும் பிரபா அண்ணன் அவர்களது ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும்,வந்தவுடன் போட்டில் கூட்டிக்கொண்டு போவதாகவும் சொல்லி கிளம்பி சென்றார்.
மூன்று நாட்களாகியும் அவர் திரும்பி வராததால் நாங்கள் செல்வா அண்ணனை விசாரித்தோம் .பிரபா அண்ணன் குண்டடி பட்டு இறந்து விட்டதாக சொன்னார்.எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை .அந்த நேரம் அங்கு வந்த கதிரவன் அண்ணன் "என்னடா சின்ன பசங்களிடன் என்ன கரையிறது என்றே உனக்கு தெரியாதா?" என்று செல்வா அண்ணனிடம் கோபித்துக்கொண்டார்.பிறகு எங்களை தனியே அழைத்துசென்று "பிரபாவுக்கு உடம்பு முடியலை ,விரைவில் வந்துவிடுவான்"என்று கூறினார் .ஏனோ அவர் சொல்வது எனக்கு உண்மையாகவே பட்டது என்பதைவிட சந்தோசம் அளித்தது  என்றே சொல்லவேண்டும் . எவ்வளவோ ஆண்டுகள் ஓடி விட்டது , எத்தனையோ செய்திகளும் கேட்க முடிகிறது . அது உண்மையென்றும் இல்லை அது பொய்யென்றும் பல ஆதாரங்கள் மாற்றி மாற்றி சொல்லப்படுகிறது .இருந்தாலும் அந்த கேள்வி மட்டும் அப்படியேதான் இருக்கிறது.

பிரபா அண்ணன் எப்போ வருவார்...?



       முன்விமர்சனம் எனப்படுவது யாதெனில் டிரைலர் ,ஸ்டில்ஸ் மற்றும் கிசுகிசுக்களை வைத்து எழுதப்படுவது( ஹாலிவுட் பாலா ,கேபிள் சங்கர் மன்னிப்பார்களாக )
       Sony Pictures மிக பிரமாண்டமான பொருட்செலவில் எடுத்திருக்கும்  படம். Independence Day,Godzilla போன்ற வெற்றி படங்களை எடுத்த Roland Emmerich தான் இயக்கியிருக்கிறார்.நேத்துவரை இவரைப் பத்தி எதுவும் தெரியாதுங்க கூகிள்   செய்த போதுதான் தெரியுது, எனக்கு ரொம்ப பிடிச்ச மெல் கிப்சொனோட 'The Patriot ' படத்தை எடுத்ததும் இவர்தான், போனவருஷம் நான் பார்த்து ரொம்ப நொந்த படமான 10,000 BC எடுத்ததும் இவர்தானாம். (நமக்கு ஹாலிவுட்ல தெரிஞ்ச Directors யாருன்னா,சுறா , டையனோசர் படம் எடுக்கிறவரு,கப்பலை கவுத்தவரு அப்புறம் தப்பு தப்பா எடிட்டிங் பண்ணி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ரத்த கலரில் படம் எடுக்கிறவரு அவ்வளோதான்).
     Mayan Calender -ல 21,December 2012-க்கு முடிஞ்சு போவதால் ,உலகம் அதற்கு பிறகு இருக்காது என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்.நிறைய ஹாலிவுட் படங்களில் வருவது மாதிரி இந்த படத்திலும் ஹீரோ John Cusack ஒரு விவாகரத்து ஆனவர்,குழந்தைகள் அவரது மனைவியுடனும் அவளது காதலனுடனும் வசிக்கிறார்கள்.(John Cusack பற்றி தெரியாதவர்களுக்கு ,Money for Nothing எனக்கு பிடிச்சது கொஞ்சம் பழசு,Pushing Tin படத்தில் இவரும் Billy Bob(Angelina jolie யோட Ex )சேர்ந்து Air trafiic tower-ல் பண்ணும் கூத்து தாங்கமுடியாது அப்புறம் Con Air பார்த்திருப்பீர்கள் போலீஸாக Nicolas Cage உடன் நடித்திருப்பார்.)
       கடவுளோட கோபத்திலிருந்து தப்பிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக  Mayan காட்டில் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய அமெரிக்க ஊரான Guatemala-வில் இருந்து தகவல் வருகிறது .அமெரிக்காவின் ரகசிய பிரிவான IHC மக்களினத்தையும் விலங்குகளையும் காப்பற்ற இமயமலையில் ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்துகிறது.அங்கு செல்வதற்கு கப்பலில் யார் யாரை ஏற்றுவது என்றும் யார் தகுதியானவர்கள் என்பதை தெர்தேடுப்பதிலும் பல பிரச்சனைகள் வருகின்றன. ஆனால் எதிர்பார்த்ததிற்கு முன்பே அசம்பாவிதங்கள் ஆரம்பிக்கின்றன,மக்கள் அனைவரும் கப்பல்களை நோக்கி ஓடுகின்றனர் . ஜான் தனது குழந்தைகளையும் மனைவியையும் தனது பழய காரில் ஏற்றி கொண்டு கப்பலை நோக்கி விரைகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே நிலநடுக்கத்தால் அழிந்து போகிறது.எப்பவுமே கிழக்கு கரை நகரைத்தான் அழிக்க வேண்டுமா ,மேற்கில் எதையாவது அழிங்கப்பா என்று வருந்துபவர்களுக்காக LA வை காலி பண்ணியிருக்காங்க.CG team நல்லாவே வேலை பார்த்திருக்கிறார்கள்.



       ஸ்பீல்பெர்க் படம் முதல் நாளே பார்க்க வேண்டுமென்று போயி ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம் என்று வருத்தப்பட்ட "War of the Worlds" படத்தோட பாதிப்பு இந்த படத்துல ரொம்பவே இருக்கு."I Am Legend"-ல எல்லோரும் air craft பிடிக்க ஓடுவாங்க இங்கே கப்பல்.CG புண்ணியத்தால் உலகத்தையே உடச்சு போட்டிருக்கிறார்கள்.
     24 சீரியலுக்கு அப்புறம் இந்தப்படத்தில்தான் ஆப்பிரிக்க அமெரிக்கரை US President -ஆக காமிக்கிறார்கள்(Danny Glover).Woody Harrelson நம்மள போல பிளாக்கராக வருகிறார் ,  காமெடி பண்ணுவார்னு பார்த்த தாடி மீசையெல்லாம் வச்சுக்கிட்டு ஹீரோவுக்கு ஹெல்ப் பண்றவரா வருகிறார்."American Gangster"-ல டென்சில் வாசிங்க்டனுக்கு கைபுள்ளையாக வந்தா Chiwetel Ejiofor-க்கு கொஞ்சம் பெரிய ரோலா கொடுத்திருக்காங்க ,நல்லாவே பண்ணியிருக்கிறார்.John Cusack ,1408-ல் பேயை பார்த்து பயந்த மாதிரி இதில் தண்ணி ,காற்று,கடல் எல்லாத்தையும் பார்த்து பயந்து ஓடிகிட்டே இருக்கார்.Christ Redeemer,வாடிகன் அப்புறம் உலகத்தில பெரிய எல்லா கட்டடங்களையும் சும்மா தரை மட்டமா ஆக்கி போடுகிறார்கள். USS JFK CV67 நேவி கப்பலை அப்படியே கடலுக்குள்ள முக்கி எடுக்கிற காட்சி Titanic-கிற்கே சவால். ஒடஞ்சு போயிகிட்டிருக்கிற Oakland Bay Bridge மேலே ஹீரோ தப்பிக்கிற கட்சியும் மிக அருமை. யார் யாரு 2012 December 21-ஆம் தேதிக்கு அப்புறம் உயிரோட இருக்கப்போறாங்க என்பதை நவம்பர் 13-ஆம் தேதி திரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
    American Idol 2009-ல் நான் இந்த பையனுக்கு  வோட்டு போடாதிங்கனு மக்களுக்கு Text அனுப்பியதால் Runner-Up ஆனா Adam Lambert ஆல்பம் ஒன்னு  இந்த படத்தை  வச்சு வந்திருக்கு.கேட்டுப்பாருங்க.

California Is Going Down ..And The World
















 
ஊர்ல படம் ரிலீஸ் ஆகாததாலே ஒரு மொழி பெயர்ப்பு படத்துக்கு நம்ம பதிவுலகமும் பத்திரிகை உலகமும் இப்படித்தான் விமர்சனம் எழுதும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டது .
ஹிந்தியில் சக்கைப்போடு போட்ட ஜப் வி மெட் படத்தோட தமிழ் பதிப்பு .அப்படியே காப்பி அடிக்காம தமிழ் நேட்டிவிட்டிக்கு  ஏத்த மாதிரி மாத்தி  எடுத்திருக்காங்க (ஆமா ஹிந்தி டயலாக்கையெல்லாம் தமிழுக்கு மாத்தி   இருக்காங்க )

ஆனா ஷாகித் கபூருக்கும் கரீனா கபூருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தில்பரத்துக்கும் தமனாவுக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அந்த கோடீஸ்வரன் பாத்திரத்துக்கு பரத் சுத்தமாக  பொருந்த வில்லை  .அதே போல் கரீனாவோட வெகுளித்தனமும் துடுக்குத்தனமும் தமனாவிடம் மிஸ்ஸிங் .
கதை என்னமோ ஒரு ரயில் பயணத்துல சந்திக்கிற இரு வேறுபட்ட நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியதுதான் .படத்தின் பின்பாதி பெண்ணுடன் வந்தவனை அவளின் காதலனாக என்னும் 'பூவேலி ' டைப் கதைதான் .
ஜெயம் கொண்டான் எனு ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் கண்ணன் ஏன் ரீமேக் படம் எடுக்க முன் வந்தார்னு தெரியல ,ஆனாலும் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார்.நமது முதல் பாராட்டு கேமரா மேன் முத்தையவுக்குத்தன் ,இரவு நேர ரயில் காட்சிகளையும் தேனியையும் படம் பிடித்த விதம் மிகவும் அருமை. வித்யா சாகரின் இசை 'ஒரு நாள் இரவில்' பாடலில் மட்டும் தெரிகிறது .
சந்தானம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் .நிழல்கள் ரவி ,அழகம் பெருமாள் ,தீபா வெங்கட் மற்றும் மனோ பாலா வந்து போகிறார்கள் .
Sun  Picture- சின்  வியாபார யுக்தி கண்டேன் காதலை காண வைத்துவிடுமேனே தோன்றுகிறது.



அன்று மதியம் 3 மணியளவில் DownTown ஸ்டேஷனில் ட்ரைன் பிடிக்கும்போது இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ஏறுன கம்பார்ட்மென்டில் என்னையும் சேர்த்து பத்து பேர் தான் இருந்தோம், அதில ஆறு பேர் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மாதிரி தெரிந்தது, MIT, Harvard,UMass எல்லாம் இந்த ரூட்ல இருப்பதால நிறைய காலேஜ் பசங்கள பார்க்கமுடியும், ரொம்ப சீரியசா அரட்ட அடிச்சிகிட்டு இருந்தாங்க. வாசலோரமா எனக்கு அருகில் ஒரு வயதான ஜோடி அவங்களுக்கு எதிர் வரிசையில் அவன். வண்டி ஸ்டேஷனில் இருந்து கிளம்பின பிறகுதான் நான் அவனை பார்த்தேன். இதற்கு முன்னால் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. எனக்கு 'திக்'கென்றது. சந்தேகமே இல்லை. அவன் என்னால் ஜெயிலுக்கு அனுப்பப் பட்டவனே தான்.

அது நடந்து ரெண்டு வருடமிருக்கும், ஒரு நாள் எனது வண்டியை ரோட்டோரமாக பார்க் செய்துவிட்டு மட்டன் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக இருந்த மிடில் ஈஸ்ட்காரன் கடைக்கு சென்றிருந்தேன். திரும்பி வரும்போது ஏதோ கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. ஒருவேளை என்னுடைய கார் தானோ என்ற தவிப்பில் காரை நோக்கி ஓடினேன். ஆம். உடைந்தது என்னுடைய கார் கண்ணாடி தான். அப்போது தான் முதன் முதலாய் அவனைப் பார்த்தேன். நான் வருவது தெரிந்ததும், அங்கிருந்து ஓடிவிட்டான். என் நல்ல காலம். அவன் என் காரிலிருந்து எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. முறைப்படி போலீசுக்கும், என்னோட இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் போன் பண்ணிட்டு என் வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்த நாள் போலீஸ் ஆளை பிடிச்சிட்டதாகவும் வந்து அடையாளம் காட்ட முடியுமான்னும் வாய்ஸ் மெயில் விட்டிருந்தார்கள். சரின்னு நானும் போயிருந்தேன். அங்கதான் அவனை முழுசாக பார்த்தேன், வெள்ளக்காரந்தான், ஹோம்லேஸ் மாதிரி தெரிந்தது, சவுத் accent-ல பேசினான், அவனும் என்னை நன்றாக பார்த்தான், அடுத்த முறை பார்த்தால் உன்னை கொன்று விடுவேன் என்று சொல்வது போலிருந்தது அவன் பார்வை. அதுக்கப்புறம் அவனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை கிடச்சதாக என்னை அழைத்த போலீஸ் சொல்லி தெரிந்துகொண்டேன்.

அவனை இப்படி எதிரும் புதிருமா, கூட்டமில்லாத ட்ரைனில் வைச்சு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதற்குள் அந்த முதியவர்கள் Broadway-ல் இறங்கி விட, அந்த காலேஜ் கும்பலும் UMass-ல் இறங்கி விட, புதிதாக ஒருவன் வண்டியில் ஏறினான். பார்ப்பதற்கு ராணுவத்தில் வேலை பார்ப்பவன் போலிருந்தான். கொஞ்சம் தைரியம் வந்தது, எனது iphone-ல் Sudoku போட ஆரம்பித்தேன். வண்டி அடுத்த ஸ்டேஷனை கடந்துவிட்டதையும் அந்த மிலிடிரிகாரன் இறங்கி இருந்ததையும் சுத்தமாக அறியாமல் இருந்தேன்.
யாரோ என்னைக் கூர்ந்து கவனிப்பது போல இருக்கவே நிமிர்ந்து பார்த்தேன், அவன்தான், என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது நானும் அவனும் மட்டுமே அந்த கம்பார்ட்மென்டில் இருந்தோம். அடுத்த ஸ்டேஷன் வர எப்படியும் ஐந்து நிமிடங்களாவது ஆகும். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் எதாவது செய்ய முயற்சி செய்தாலோ, இல்லை இல்லை, அவன் கிட்ட இருந்து ஒரு அசைவு தெரிந்தாலே, உடனடியா Emergency Lever -ஐ இழுத்து விடலாம். என்னவானாலும் சரி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடலாம் என முடிவு செய்து கொஞ்சம் தைரியமாகவே உட்கார்ந்து இருந்தேன்.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமா கடக்கிறது காதலில் மட்டுமில்லை பயத்திலும்தான் என்கிற உண்மை எனக்கு அப்பத்தான் புரிஞ்சது. அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டதாக அறிவிப்பு வரவும் நான் அவசரமாக எழுந்திருக்கவும் அவனும் எழுந்திருந்தான். நான் வாசலை நோக்கி ஓட அவன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்திருந்தான். ட்ரைன் நின்ற அதிர்வில் நான் நிலை தடுமாறி கிழே விழ அவன் நெருங்கி வந்து துப்பாக்கியை என் நெற்றியில் வைத்து விசையை அழுத்த....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ........ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அழைக்க "என்னடா ஒரு கதை நச்சுன்னு எழுதி நல்ல பேர் வாங்கலாமுன்னா தனியா ஒரு அரை மணி நேரம் கிடைக்க மாட்டேங்குதே" புலம்பிக்கொண்டே Ctrl-யும் s-யும் ஒரே  நேரத்தில அழுத்திட்டு   வாசலை நோக்கி சென்றான் கதாசிரியன் கண்ணன்.

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

பொதுவா நம்ம பசங்க சொல்றது US-ல இருந்து வந்தா இவனுக பண்ற அலப்பர தாங்க முடியலடா, எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுல அப்படி இருக்கும், இப்படி இருக்கும், இப்ப்படித்தான் பாரு ஒரு தடவ express way-ல போய்கிட்டிருக்கும்போது அப்படின்னு ஆரம்பிக்கிறாங்கப்பா. இதுக்கெல்லாம் என்ன காரணமுன்னு யோசிச்சு பாத்தப்ப நாமளும் கொஞ்சம் எழுதலாமுன்னு தோனுச்சு அதான் இந்த பதிவு.


நான் ஆண்டிப்பட்டில அஞ்சாப்பு படிக்கும்போது சுந்தரு மதுரைல ஒரு A/C தியேட்டருல அப்பாவோட படம் பாத்துட்டு வந்து பண்ண அலப்பர இருக்கே .அவன் சொல்றான் " டே மதுரைல எத்தன பஸ் ஓடுது தெரியுமா? (எண்ணி பத்துருப்பான் முடிஞ்சிருக்காது அவனுக்குத்தான் ஒண்ணாம் வாய்ப்பாடே சரியாய் தெரியாது ) நாங்க போயிருந்தப்ப பெரியாருக்கு திருவிழா அதன் பஸ் ஸ்டாண்டுல ரொம்ப கூட்டம் நடக்கவே எடமில்ல (மாரியாத்தா கோவில்ல கூட்டமுன்னா மாரியாத்தா திருவிழா பெரியார் பஸ் ஸ்டாண்டுல கூட்டமுன்னா பெரியார் திருவிழா, நம்ம ஆளு ரொம்ப புத்திசாலி). அவன் படத்த பத்தியும் மதுரைய பத்தியும், ஏன், வாங்கி திண்ண சுண்டல பத்தியுங்கூட அந்த அலப்பர வுட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. படம் முடியிறதுக்கு 10 நிமிசத்துக்கு முன்னால A/C-ய நிறுத்தலனா தியேட்டர் வெடுச்சுடுங்கின்கிற உண்மையையும் அவன்தான் எனக்கு சொன்னான்.

அப்பறம் காலேஜ்ல மெட்ராஸ் காரைங்க பண்ண அலப்பரையும் மெட்ராஸ், மெட்ராஸ் அல்லாதோர் அப்படின்னு கோஸ்டி பிரிஞ்சதுக்கும் அதே அலப்பரதான் காரணம். நம்ம சுந்தர் மேட்டருக்கு வர்றேன், மாப்புள மெட்ராஸ் இருந்தாப்புல அப்ப. நான் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கி அவனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், திமு திமுன்னு ஒரு கூட்டம் ஸ்டேஷன் நோக்கி ஓடி வருது, இங்கிட்டு பாத்தா ரோட்டப்பாத்து ஒரு கும்பல் ஓடுது, ஒன்னும் புரியாம பெட்டிய காலுக்கு நடுவுல வச்சிக்கிட்டு நிக்கிறேன். அந்த பய சுந்தரு வந்த பின்னாடி என்னடா விஷயம் இவ்வளோ பரபரப்பா இருக்குன்னு கேட்டா, ஆபீஸ் டைம் அதான் பஸ்ஸோ டிரைனோ பிடிக்க ஓடுவாங்க இது கூட தெரியாதான்னு வுட்டாம்பருங்க ஒரு லுக்கு என்ன அலப்பர புடுச்ச பய.

அவன் பெங்களூர் போயுட்டு மெட்ராஸ் வந்து பண்ண அலப்பர இருக்கே, யப்பா .. MG ரோடு, Brigade ரோடெல்லாம் பிகருங்களா அலுயுதாம் KFC-ன்னு ஒரு கடைல (அப்போ) எதோ ஒரு கர் சாப்புட்டராம், இடி மழை பெஞ்சிக்கிட்டு இருக்கும்போதோ ஒரு குட்டி Ice cream சாப்புட்டுகிட்டே ரோட்டுல நடந்து போச்சாம் ... என்ன அலப்பர.



நாம எப்பிடியோ மாட்டுவண்டிய புடுச்சு அமெரிக்க வந்து பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு ... கொஞ்ச நாளைக்கு முன்னால ஊருக்கு வந்தப்ப Star Bucks-ல Cappuccino குடுச்சிட்டு இருக்கும்போது அப்படின்னு ஆரம்பிக்கிறதுக்கு முன்னலேய நம்ம சுந்தரு சொல்றான் ...

ஏன்டா இப்படி அலப்பர பண்ற


பி.கு : ஆண்டிப்பட்டிக்கு மதுரை, மதுரைக்கு சென்னை, சென்னைக்கு பெங்களூரு, இந்தியாவுக்கு வேற நாடு அப்படின்னு அலப்பரைகளுக்கும் அர்த்தமிருக்கத்தான் செய்யுது.

Hygienic food, Minaral water, வூடு கட்ட மறந்தாலும் வூட்ல Western Toilet கட்டற அலப்பரைகளப் பத்தி அடுத்து அடுத்து எழுதப் போறேன் ...