வடபழனி குமரன் காலனியில் எனது பக்கத்து அறையில் தங்கியிருந்தார் ராஜன். உதவி இயக்குனராக ஒருவரிடம் வேலை பார்த்து வந்தார். எனது ரூம் மேட் சுந்தர் ஒரு உதவி கேமரா மேனாக இருந்ததால் அவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. டீக்கடைக்கு போகும்போது,மேஸ்ல சாப்பிடும்போது,பீர் அடிக்கும்போது ,ஏன் படம் பார்க்கும்போது கூட ஏதாவது கதை சொல்லி எப்படியிருக்கு ,இந்த கதை இந்த ஹீரோவுக்கு சரியாய் இருக்குமா , ஏற்கனவே எந்த படத்திலாவது இந்த கதை வந்திருக்கா அப்படின்னு கேட்டு கொண்டேயிருப்பார்.
நான் மூன்று நாள் மொத்தமாக லீவு கிடைத்தாலே பெட்டியை தூக்கிக்கொண்டு ஊருக்கு கிளம்பும் போது மனுஷன் ஆறு வருஷமா ஊருக்கு போனதே இல்லையென சொன்னது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.பல நேரங்களில் டைரக்டர் ரொம்ப அசிங்கமா திட்டிட்டாருங்க என்று புலம்பும்போது ,ப்ராஜெக்ட் மேனேஜர் ஏன் வேலை முடியலைன்னு கேட்டாலே , என்னைய சிங்கபூர்ல கூப்புடுறாங்க.அமெரிக்காவுல கூப்புடுராங்கன்ன்னு சொல்லி பேப்பர் போட்டுட்டு வந்துகிட்டிருக்கோம்,நீங்க ஏன் இப்படி இருக்கீங்க வேற வேலை பார்க்கலாமே என்று கொபப்பட்டதுண்டு. நானே அவரிடம் கேட்டிருக்கிறேன்,

 "அப்படி என்னதாங்க இருக்கு இந்த சினிமாவுல ,நிறைய பணம் சம்பாரிக்கனுமா, நல்ல படம் எடுத்து மக்களுக்கு செய்தி சொல்லனுமா , நல்ல பேர் எடுக்கனுமா,இல்லை அந்த புகழ் போதைக்காக இவ்வளவு கஷ்டப்படுறீங்களா?" அப்படின்னு.
ஆனால் அவரது பதில் எப்பவுமே ஒன்றாகத்தான் இருந்தது "ஒரு டைரக்டர் ஆகணுங்க ".
ஒரு நாள் திடிரென்று சொன்னார்
"டைரக்டர்கிட்ட நான் தனியாக படம் பண்ணப் போறதாக சொல்லிட்டு வந்துட்டேன் ".
அப்போது அங்கே இருந்த எல்லாருமே ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க,
"ஏன் ராஜன் அவசரப்படுற ? இது என்னோட ரூம் மேட் சுந்தர்.
"நானெல்லாம் பத்து வருஷமா பீல்டில் இருக்கேன் ,என்னையே ஒருத்தனும் மதிக்கிறதில்ல உனக்கு என்னடா இவ்வளோ அவசரம் ?" இது குமார்.
"எத்தனையோ  பேர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நீங்க படம் எடுத்தா நம்மளையும் கண்டுக்கோங்க அப்படின்னு சொன்னானுங்க ,ஆனா இப்ப நம்ம போயி அவனுக முன்னால நின்னா எங்கையோ பார்த்தமாதிரி இருக்கீங்க ,நம்ம அப்புறம் மீட் பண்ணுவோம்கிறான்" இது மாசிலாமணி அண்ணன்.
"அசோசியட்டாவே நாலு படம் பண்ணிட்டேன் ,என்கிட்டேயே உட்கார்ந்து கதை கேக்க மாட்டேங்கிறாங்க .உன்னை யாரு தட்டு வச்சு அழைக்கிறாங்க " இது நம்ம பாண்டி அண்ணன்.
 "உங்க பக்கத்துக்கு ரூமில் இருந்தவரு சின்னப்பையன்,ரெண்டு படம்கூட முழுசா பண்ணல ,இவனையெல்லாம் கம்பனி கேட்லயே நிறுத்திடுவாங்க அப்படின்னு சொன்னிங்க,இன்னைக்கு அஜித் ,விஜயகாந்துன்னு ஆரம்பிச்சு தெலுங்கு வரைக்கும் போயிட்டாரு.இன்னொருத்தரால் இதை பண்ணமுடியும்ன்னா என்னாலும் பண்ண முடியும்". என்று ராஜன் கொஞ்சம் கோபமாகவே பதில் சொன்னார்.
 எனக்கும் அவர்மேல் ஒரு நம்பிக்கை இருந்தது.
 ஹீரோக்களுக்கும்,ஹீரோ அப்பாக்களுக்கும் கதை சொல்றது,கம்பனிகளில் காத்து கிடக்கிறது அப்படின்னு ராஜன் அலைய ஆரம்பிச்சு அந்தா இந்தானு ஒரு வருஷம் ஓடிபோயிருச்சு.வாரத்தில்ரெண்டு நாள் அவரை பார்ப்பதே கஷ்டமாகிவிட்டது.
 ஒரு நாள் என்னிடம் "அடிக்கடி வயிற்று வலி வருது ,டாக்டரை பார்த்துட்டு வரலாம் வர்ரீங்களா " என்று சொன்னார். நானும் சென்றேன் .
 டாக்டர் செக் பண்ணி பார்த்துட்டு அல்சராக இருக்க வாய்ப்பு இருக்கு பிளட் டெஸ்ட்டுக்கு கொடுத்துட்டு போங்க ,ரெண்டு நாள் கழிச்சு வாங்கன்னு சொன்னார்.
 ரெண்டு நாளில் அல்சர் தான் என்று உறுதியாகிவிட்டது .உதவி இயக்குனர்களுக்கு வரக்கூடாத வியாதி.அதுவும் யாரிடமும் உதவியை எதிர்பார்க்காத,உதவியை மறுக்கிற உதவி இயக்குனர்களுக்கு வரக்கூடாத வியாதி . கொஞ்ச நாளைக்கு தனியாக படம் பண்றத தள்ளி வச்சுட்டு ஒரு நல்ல டைரக்டர்கிட்டவொர்க் பண்ணலாமே அப்படின்னு நானும் அவரை வற்புறுத்த வேண்டிய கட்டாயமாகிவிட்டது.
 எனது வேலை பெங்களூருக்கு மாற்றல் ஆகி விடவும் ,சுந்தர் தெலுங்கு படங்களில் வொர்க் பண்ண ஆரம்பிக்கவும் ராஜனை பற்றி அவ்வளவாக அறிய முடியவில்லை .ஆனால் அவர் தனியாக படம் செய்வதற்குத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.சுந்தர் ,சென்னை வந்த பிறகு ராஜனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது .
 "ஒரு கம்பனியில் பேசிக்கிட்டு இருக்கேன் ரெண்டு மாசத்திலே பூஜை போட்டுருவோம் , மறந்திராம வந்திருங்க "
 "படத்துக்கு பேரு என்ன ராஜன்?"
 "முடிவாகல .பேப்பரில் பெருசா வரும் பார்த்துக்கோங்க ".
 "ஹீரோயின் யாருங்க " நமக்கு முக்கியமான கேள்வி .
 "ஹீரோ முடிவு பண்ணுவார் .ஹ ஹா " அவரது சின்ன சிரிப்பிலும் ,பெரிய சந்தோஷத்தை உணர முடிந்ததது .
 சுந்தர் கொஞ்ச நாட்கள் கழித்து போன் பண்ணியிருந்தான்.ராஜனை ICU வில் வைத்திருப்பதாக.நான் கிளம்பி வந்து கொண்டிருந்த போதே ராஜன் இறந்துவிட்டதாக சுந்தர் போன் செய்தான்.என் வாழ்க்கையில் கசந்த ரெயில் பயணம் அதுவாகத்தான் இருக்கும்.நான் ஹாஸ்பிடலை அடைந்தபோது

 ராஜனை ஒரு கட்டிலில் கிடத்தியிருந்தார்கள். சுற்றி ஒரு சிறிய கூட்டம் இருந்தது.அவரது அம்மாவும் அப்பாவும் அவர் மெல் விழுந்து கதறி கொண்டிருதார்கள்.இப்போதுதான் அவர்களை முதன் முறையாக பார்க்கிறேன்.
 டாக்டரிடம் விசாரித்த போது ஏதோ நோயின் பெயரை சொன்னார்.அல்சர் வந்ததற்கு அப்புறமாவது அவர் உடம்பை ஒழுங்காக கவனித்து இருந்தால் அவரை காப்பற்றி இருக்கலாம் . ஆனல் ராஜன் உடம்பை கவனித்து கொள்ளவே இல்லை என்றார்.அவரை ஊருக்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டு ,அவரது பொருட்களையும் வீட்டிற்கு கொடுத்துவிடலாம் என்று நானும் சுந்தரும் அவரது அறைக்கு சென்றிருதோம்.அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவரது படுக்கை தவிர அவருடைய அந்த பெட்டி மட்டுமே இருத்தது.பெட்டிமுழுவதும் பைல் செய்யப்பட்ட காகிதங்கள்.ஒவ்வொரு பைலிலும் டைட்டிலுடன் கீழே கதை,திரைக்கதை,வசனம் இயக்கம் ராஜன் என்று எழுதியிருந்தது மனதை என்னவோ செய்தது.அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்த பொழுது,ராஜனை ஊருக்கு எடுத்து செல்வதற்கான எல்லா பார்மாலிடிசும் முடிந்திருந்தது.அவரது அப்பாவிடம் கையெழுத்து வாங்குவற்காக ஒரு அட்டெண்டர் வந்திருந்தார்,
 "அய்யா ஒரு கையெழுத்து போட்டுட்டு நீங்க உங்க பையனை எடுத்துகிட்டு போகலாம்".
 அழுது கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து அவரிடம் கேட்டார்  "ரொம்ப நல்லது தம்பி, மை டப்பா இருக்குமா?".